
பண மதிப்பிழப்பு நடவடிக்கை…அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் பிரணாப் முகர்ஜி….
இந்தியாவில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மார்ச் 31- வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகு செல்லா நோட்டுக்களை வைத்திருந்தாலோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ அல்லது பெற்றாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்துக்கு நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.
இந்த அவசர சட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30–ந் தேதி வரை அவர்கள் ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. கெடுவுக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது.