முதல் போஸ்ட்-பெய்ட் இணைப்பு..! காஷ்மீரில் மக்களுக்கு திங்கள் முதல் நல்ல செய்தி!

By Asianet TamilFirst Published Oct 13, 2019, 5:56 PM IST
Highlights

காஷ்மீரில் போஸ்ட்-பெய்ட் மொபைல் தொலைபேசி சேவைகள் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் தெரிவத்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 370 பிரிவை மத்திய அரசு திரும்பப்பெற்றது. மாநிலத்தையும் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக கடந்த 69 நாட்களாக அங்கு கடும் பாதுகாப்பு கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லேண்ட்லைன் தொலைபேசி சேவை, செல்போன், இன்டர்நெட் ஆகியவை முடக்கத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 70 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அதன்பின் காஷ்மீரில் படிப்படியாக இயல்புநிலை திரும்பியபின், லேண்ட் லைன் இணைப்புகள் மட்டும் வழங்கப்பட்டது. அதன்பின், படிப்படியாக செல்போன்களில் இன்கம்மிங் அழைப்புகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 31-ம் தேதி முதல் ஜம்முகாஷ்மீர், லடாக் முழுமையாக யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் நிர்வாகத்துக்குள் வருகிறது.

இதற்காக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் காஷ்மீர் மாநில நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. நாளேடுகளில் விளம்பரம் செய்து மக்கள் வெளியே வாருங்கள், தீவிரவாதிகள்  அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டாம் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 40 லட்சம் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் திங்கள் நண்பகல் 12 மணி முதல் இந்த வகை சேவைக்கு அனுமதியளிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவலை திட்ட முதன்மை செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்தார். ஆனால் 26 லட்சம் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு எப்போது சேவை தொடங்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் இணையதளச் சேவை தொடங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கும் அரசின் அறிவிக்கையைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் பெய்ட் தொலைபேசி சேவைகள் தொடங்கவுள்ளன.

லேண்ட் லைன் தொலைபேசி சேவைகள் ஆகஸ்ட் 17ம் தேதி பகுதியளவில் தொடங்கப்பட்டன. செப்டம்பர் 4ம் தேதி அனைத்து லேண்ட் லைன் இணைப்புகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

click me!