2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு விளம்பர நிறுவனங்களின் உதவியை அரசியல் கட்சிகள் நாடத் தொடங்கியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைக்கு 2024ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இப்போது அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளான, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரச்சாரங்கள், வாக்கு சேகரிப்பு முழக்கங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதற்கு அவர்களுக்கு உதவ விளம்பர நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளன.
முன்னணி விளம்பர ஏஜென்சிகளும், தங்கள் பங்கிற்கு இந்த கட்சிகளுக்கான வரைபடங்களை உருவாக்க மைக்ரோ டீம்களை அமைக்கத் தொடங்கியுள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் தொடர்புகொள்வதற்காக சமூக வலைதளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் யூடியூபர்களை அடையாளம் கண்டு வாக்காளர்களைக் குறிவைக்க தனி உத்திகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
undefined
“இம்முறை, வாக்காளர்களுடன் தொடர்பு கொள்ளும் செயல்முறை முந்தைய ஆண்டுகளை விட மிகவும் சிக்கலானதாகவும், சிதறியும் இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளில் கட்சிகளின் சாதனைகள் போன்ற வெளிப்படையான செய்திகளை உள்ளடக்கிய முக்கிய ஊடகங்களுக்கான தனி உத்திகளை சிறிய சமூக நிலப்பரப்பில் உள்ள வாக்காளர்களை தொடர்பு கொள்வதற்காக நாங்கள் உருவாக்கி வருகிறோம்.” என ஒரு முன்னணி விளம்பர ஏஜென்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“சிறிய சமூக நிலப்பரப்பில் செல்வாக்கு மிக்கவர்களை கண்டறிந்து பிராந்திய மொழிகளில் எளிமையான முழக்கங்களை உருவாக்குவதன் மூலம் நாங்கள் இதைச் செய்கிறோம். இந்த செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஹைப்பர் லோக்கல் கிளஸ்டர்களில் வாக்காளர்களுடன் பேசும் திறம்பட செயல்படும் சில ஆயிரம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் செல்வாக்கு செலுத்துபவர்களுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.” என நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், 2024 மக்களவைத் தேர்தலில் முன்னணி அரசியல் கட்சிகளின் மொத்த விளம்பரச் செலவுகள் 2019ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக ஆய்வு மையத்தின்படி, 2019ஆம் ஆண்டில் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகள் சுமார் ரூ.25,000 கோடி செலவிட்டுள்ளன.
“"2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2024ஆம் ஆண்டில் அவர்களுடன் நாங்கள் கூட்டு சேர வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.” என Ogilvy India நிறுவனத்தின் உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் செயல் தலைவர் பியூஷ் பாண்டே கூறியுள்ளார். வருகிற ஜனவரி மாதம் முதல் அந்நிறுவனத்தின் ஆலோசகர் பொறுப்பை பியூஷ் பாண்டே ஏற்கவுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி அருண் சிங் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா ஆகியோரிடம் விளம்பர ஏஜென்சிகளின் பட்டியலை இறுதி செய்யும் பொறுப்பை பாஜக மேலிடம் வழங்கியுள்ளதாக இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. பல்வேறு ஊடகங்களுக்கான பிரசாரத் திட்டத்தையும் கட்சி வகுத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அரசியல் விளம்பரங்களில் நிபுணத்துவம் பெற்ற க்ரேயன்ஸ் அட்வர்டைசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணால் லாலானி கூறுகையில், “2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2024 தேர்தலில் விளம்பரச் செலவு கணிசமாக அதிகமாக இருக்கும். தற்போது நிறைய தகவல் தொடர்பு சேனல்கள் உள்ளன. எனவே, 2019ஐ ஒப்பிடும்போது, விளம்பர நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும்.” என்றார்.
ஆம் ஆத்மி தனது அரசாங்கத்தின் கல்வி மற்றும் சுகாதார மாதிரிகளை முன்வைக்க யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களுடன் பேசி வருவதாக இதுகுறித்த விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
முன்னதாக, Ogilvy, Crayons, McCann, Madison Word மற்றும் Soho Square உள்ளிட்ட விளம்பர ஏஜென்சிகள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தனது சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்க டிசைன்பாக்ஸைப் (Designbox) பயன்படுத்துகிறது.
2024 மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஆறு மாதங்களாக சமூக ஊடகங்களுக்கு மட்டுமின்றி தனது முக்கிய பிரச்சாரங்களை வடிவமைக்கவும் டிசைன்பாக்ஸைப் பயன்படுத்தி வருகிறார். 2017 இல் காங்கிரஸின் பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த நிறுவனம் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது. முன்னாள் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் கேப்டன் அமரீந்தர் சிங் உட்பட பல மூத்த தலைவர்கள் டிசைன்பாக்ஸின் சேவைகளை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அச்சு, தொலைக்காட்சி விளம்பரம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், டிஜிட்டல் ஆன்லைன் விளம்பரம் மற்றும் ஹோர்டிங்குகள், பேனர்கள் போன்ற வெளிப்புற விளம்பரங்களை உள்ளடக்கிய ஏஜென்சிகளை அரசியல் கட்சிகள் அமர்த்த உள்ளன. நகர்ப்புற மற்றும் கிராமப்புற விளம்பரங்களுக்கு தனித்தனி ஏஜென்சிகள் பணியமர்த்தப்படலாம் என்கிறார்கள்.