
கேரளா மாநிலத்தில் அண்மையில் பதிவான உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே நடைபெற்ற வன்முறை காரணமாக காவல் துறையினர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.
கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தல் அதற்கு முன்மாதிரியாக பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமாக 6 மாநகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் 4ல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமான வெற்றியைப் பதிவு செய்தது.
45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்துவந்த தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியது. பாஜகவின் வெற்றி இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இடதுசாரி கூட்டணி வெறும் ஒரு தொகுதியை மட்டுமே தக்கவைத்துக் கொண்டது.
தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியான நிலையில், அன்றைய தினம் இரவு கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அலுவலகத்தை கடுமையான ஆயுதங்களால் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடித்து வருகிறது.
மராடு பகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெற்றி ஊர்வலத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த ஊர்வலத்தில் மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் குவிந்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.