அடல் சேது: இந்தியாவின் நீண்ட கடல் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

By SG Balan  |  First Published Jan 11, 2024, 3:21 PM IST

அடல் சேது பாலம் மொத்தம் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும்.


பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவிற்குச் செல்லும்போது, நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலத்தைத் திறந்து வைக்க இருக்கிறார்.

முன்னாள் பிரமதர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக அடல் சேது பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம், மும்பையில் ஜனவரி 12ஆம் தேதி மாலை சுமார் 3:30 மணிக்குத் திறந்து வைக்கப்படும்.

Tap to resize

Latest Videos

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அடல் சேது பாலம் மொத்தம் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கிமீ நீளம் கொண்ட ஆறுவழிப் பாலம். கடலில் சுமார் 16.5 கிலோமீட்டர் நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிலோமீட்டர் நீளமும் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

இந்தியாவிலேயே மிகவும் நீளமான அடல் சேது என்று அழைக்கப்படும் கடல் வழி பாலத்தை பிரதமர் மோடி நாளை மும்பையில் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். pic.twitter.com/Xw2ENUNvH4

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இந்த பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்குவதோடு, மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். மேலும் இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

தற்போது, அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக, மும்பை மற்றும் நவி மும்பை இடையிலான பயணத்துக்கு சுமார் இரண்டு மணிநேரம் ஆகிறது. அடல் சேது பாலம் மூலம் இந்தப் பயண நேரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடக்க முடியும். இந்தப் பாலம் மும்பையில் வசிப்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்ப மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதன்கிழமை மும்பை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, புதிய அடல் சேது பாலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ.  ஆனால், பைக், ஆட்டோ மற்றும் டிராக்டர்கள் கடல் பாலத்தை பயன்படுத்த முடியாது என காவல்துறை தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்கள், டாக்சிகள், இலகுரக மோட்டார் வாகனங்கள், மினிபஸ்கள் மற்றும் டூ ஆக்சில் பேருந்துகளின் வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ ஆக இருந்தாலும், பாலத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில்தான் பயணிக்க வேண்டும். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் வேகத்தடைகளையும் மும்பை போலீசார் அமைத்துள்ளனர்.

பிரதமர் மோடியின் நாளைய மகாராஷ்டிர பயணத்தின்போது, பிரதமர் மோடி 27வது தேசிய இளைஞர் விழாவையும் தொடங்கி வைக்கிறார். நவி மும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அங்கு ரூ.12,700 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

வண்ணமயமாக மாறும் வாட்ஸ்ஆப்! 5 கலர் ஆப்ஷனுடன் புதிய அட்பேட் ரெடி!

click me!