
பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில், முப்படை வீரர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக இந்திய விமானப்படை (IAF) வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தானின் இராணுவ விமான தளங்கள் மட்டும் அழிக்கப்படவில்லை, ஆனால் அவர்களின் துணிச்சலும் தோற்கடிக்கப்பட்டது என்று மோடி கூறினார்.
இந்தியாவின் S 400- வான் பாதுகாப்பு அமைப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தியாவுக்கு அவர்கள் சவால் விடுத்தார்கள். இந்தியாவை அழிக்க நினைத்தார்கள். நம்மை அழிக்க நினைத்தவர்களை நீங்கள் அழித்திருக்கிறீர்கள்.
இந்திய வீரர்களை நினைத்து உலகமே பாராட்டுகிறது. வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்தியர்களை தொட நினைத்தவர்களுக்கு பேரழிவு தான் ஒரே முடிவு. பாகிஸ்தானின் இதயத்தை எப்போது நாம் துளைத்தோம் என்று நமக்கு தெரியும். நமது விமான தளங்களை அழிக்க நினைத்த அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.
"பாரத் மாதா கி ஜெய்" என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, நாட்டுக்காக தங்கள் உயிரை அர்ப்பணிக்க நாட்டு வீரர்கள் எடுக்கும் உறுதிமொழி. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அவர்களின் வீரத்தின் கதைகள் வரலாற்றில் என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
அணு ஆயுத பூச்சாண்டி எல்லாம் இனி எடுபடாது. விமானப் படை, ராணுவப் படை இடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. S 400- வான் பாதுகாப்பு நமக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது. நமக்கு சுயமரியாதை கிடைத்துள்ளது. நமது லட்சுமண ரேகையே பயங்கரவாதத்தை அழிப்பதுதான்.
மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ் அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல நாட்கள் கடுமையான மோதல்கள் நிலவியது. ஏப்ரல் 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பிறகு பிரதமரின் முப்படைகள் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.