வாகன ஓட்டிகளே கவனம்…பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது: ஒபெக் நாடுகள் புதிய முடிவு....

By Selvanayagam PFirst Published Dec 7, 2019, 12:27 AM IST
Highlights

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக் நாடுகள்) பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் சப்ளை தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயருவதற்கான அபாயங்கள் உள்ளது.
 

பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, கச்சா எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மை ஏற்படுத்த மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன்களை பேணும் நோக்கில் ஓபெக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

 ரஷ்யா, சவுதி உள்பட 15 நாடுகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். ஒபெக் மற்றம் அதன் கூட்டணி நாடுகளின் அமைச்சர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து உற்பத்தியை அதிகரிப்பது அல்லது குறைப்பது தொடர்பான முடிவுகளை எடுப்பர்.


இந்நிலையில் வியன்னாவில் ஓபெக் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபெக் மற்றும் கூட்டணி நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கச்சா எண்ணெய் விலைக்கு ஆதரவாகவும், அதிக உற்பத்தியால் தேக்க நிலை ஏற்படுவதை தவிர்க்கவும் பெட்ரோலிய சப்ளையை குறைக்க அவர்கள் ஒரு மனதாக முடிவு எடுத்தனர். 

அதாவது மேலும் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொண்டனர். 
ஏற்கனவே 12 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஓபெக் நாடுகள் தற்போது மேலும் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு எடுத்து இருப்பது உலக சப்ளையில் நெருக்கடியான நிலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

ஏனென்றால் நாள் ஒன்றுக்கு 17 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி என்பது உலக சப்ளையில் 1.7 சதவீதமாகும். 

சப்ளையில் நெருக்கடி ஏற்பட்டால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும். அதனால் இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். நம் நாட்டில் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆகையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயரும்.

click me!