ரெடியா இருங்க…! பெட்ரோல், டீசல் விலையை இனி தினமும் மாத்தப்போறாங்க...

First Published Apr 7, 2017, 4:05 PM IST
Highlights
petrol diesel price will be hike everyday


சர்வதேச சந்தை போல, உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது, இந்த முறை இனி நாள்தோறும் என ரீதிக்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் உள்ள கச்சா எண்ணெய் சந்தையில் 95 சதவீதத்தை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வைத்துள்ளன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை தங்கம் விலையைப் போல், நாள்தோறும் ஏன் மாற்றி அமைக்க கூடாது என்பது குறித்து ஆலோசித்து உள்ளன.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமைச்சக அதிகாரிகள் ஆகியோருடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்கள்.

அது குறித்து எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பெட்ரோல், டீசல்விலையை நாள்தோறும் மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்தோம். இப்போது  இந்த விலையை உடனுக்குடன் நாடுமுழுவதும் உள்ள டீலர்களுக்கு தெரிவிக்கும் தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் இருக்கின்றன.

அதனால், நிச்சயம் இந்த திட்டம் சாத்தியமாகும் ஆனால், இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் எனக் இப்போது கூற முடியாது ’’ என்றார்.

நாட்டில் உள்ள பெரும்பாலான பெட்ரோல், டீசல் முகவர்கள் அனைவரும் எண்ணெய் நிறுவனங்களுடன் டிஜிட்டல் முறையில் தொடர்பில் இருக்கிறார்கள்.

பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் ஆட்டோமேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆதால், நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல்விலையை நாள்தோறும் மாற்றும் போது அதை எளிதாக அனைத்து 53 ஆயிரம் முகவர்களுக்கும் தெரியப்படுத்துவது என்பது தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் மிக எளிதானது.

15 நாட்களுக்கு ஒருமுறை விலையை மாற்றும்போது, சில நேரங்களில் அதிக அளவு குறைக்கப்படலாம் அல்லது அதிகரிக்கப்படலாம். ஆனால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படும் போது, சில பைசாக்கள் மட்டுமே மாறும். சில பைசாக்கள் உயர்ந்தாலும் மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

சில பைசாக்கள் குறைத்தாலும் அது பெரிய அளவில் நிறுவனங்களுக்கும்  பாதிப்பு ஏற்படுத்தாது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் அரசியல் தலையீடு இன்றி எளிதாக லாபத்தை அள்ளிவிடும். 

சர்வதேச அளவில் பின்னபற்றப்பட்டு வரும் நாள்தோறும் மாற்றி அமைக்கப்படும் விலையால் மக்களுக்கும், முகவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. 

மேலும் தேர்தல் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதும், அதிகரிப்பதும் ஆளும் கட்சியை பாதிக்கும் என்பதால், நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், எண்ணெய் நிறுவனங்களுக்கு அந்த கவலை இல்லை. 

click me!