அதிர்சசி... கேரளாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா... அச்சத்தில் மக்கள்!!

By Narendran SFirst Published Apr 22, 2022, 4:39 PM IST
Highlights

சீனாவில் தற்போது பரவி வரும் உருமாறிய XE வகை கொரோனா வைரஸ் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் தற்போது பரவி வரும் உருமாறிய XE வகை கொரோனா வைரஸ் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனிடையே உருமாறிய XE வகை கொரோனாவால் நான்காம் அலை பரவி வருவதாக உலக நாடுகள் தெரிவித்திருந்தன. இந்த வகை தொற்று தற்போது சீனாவில் தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இந்த வகை கொரோனா தொற்று அதி வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் பரவலை கட்டுப்படுத்த அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்தியாவிலும் இந்நோய் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் முதன் முதலாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு XE வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நோய் பாதிப்புக்கு உள்ளான வாலிபரின் பயண விவரம், அவர் யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பன போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கொல்லம் பகுதியில் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 67 பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 282 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது கேரளாவில் 2 ஆயிரத்து 507 பேர் மட்டுமே தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு XE வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!