கர்ப்பமான 13 வயது சிறுமி….. என்னவென்றே தெரியாமல் தவிப்பு….கருவை கலைக்க மும்பை கோர்ட் அனுமதி….

First Published Apr 10, 2018, 9:51 AM IST
Highlights
pergnant small girl court allo to abortion in mumbai


மர்ம நபர் ஒருவரால்கடத்திச் சென்று கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை சிறுமியின் உடல் மற்றும் மனநிலையைக் கருத்தில் கொண்டு கலைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகேயுள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அந்த சிறுமியை கடத்திச் சென்று வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி சிறுமியை மும்பைக்கு அழைத்து வந்தனர். அவளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்பட்டதும், கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.

ஆனால், அந்த தகவலை பெற்றோருக்கு உரிய நேரத்தில் போலீசார் தெரிவிக்க தவறிவிட்டதால் தற்போது 24 வார கருவாக சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்ககோரி அவரது தந்தை மும்பை உயர்நீதிமன்றத்தின்  உதவியை நாடினார்.

20 வாரங்களுக்கும் அதிகமாக வயிற்றுக்குள் வளர்ந்துவிட்ட கருவை கலைப்பது தாயின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால் இதுதொடர்பாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

பரிசோதனைக்கு பின்னர் கோர்ட்டிடம் நேற்று  அறிக்கை தாக்கல் செய்த டாக்டர்கள், தற்போதைய நிலையில் குழந்தையை பிரசவிப்பது அந்த சிறுமியின் மனநிலை மற்றும் உடல்நிலைக்கு ஏற்புடையதல்ல. எனவே, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து விடலாம் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை இன்று அரசு மருத்துவமனையில் கலைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றம்  ஒப்புதல் அளித்துள்ளது. 

சிறுமியின் வயிற்றில் குழந்தை வளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தும் இவ்விவகாரத்தில் மெத்தனப்போக்குடன் நடந்துகொண்ட போலீசாருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற பிரச்சனைகளை போலீசார் உணர்வுப்பூர்வமாக கையாள்வது எப்படி? என்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளின் மூலம் மகாராஷ்டிர மாநில அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும்  நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

click me!