
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பையேற்று பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் பிரதமர் மோடி, ஜூன் 20ஆம் தேதி நியூயார்க் செல்லவுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பின்னர் வாஷிங்டன் செல்கிறார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அன்றைய தினம் இரவு வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரவு விருந்து அளிக்கவுள்ளார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறவுள்ளதால், அவரது பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.
முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி!
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் சார்பு அமைப்புகளுடனும், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பல குழுக்களுடனும் ஐஎஸ்ஐ சந்திப்புகளை நடத்தியுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடா நாட்டை சேர்ந்த அதிகாரிகளை இந்தியா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.