
பாகிஸ்தான் தூதரகத்திற்குக் கேக் கொண்டு செல்லும் நபரின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த காணொளி வெளியானதால், பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தான் தூதரகம் கேக் வெட்டிக் கொண்டாடியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வைரல் காணொளியில், கேக்கை கையில் எடுத்துச் செல்லும் நபர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தவிர்ப்பதைக் காண முடிகிறது. “இந்த கேக் எதற்கு? கொண்டாட்டம் எதற்கு?... நீங்கள் பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வருகிறீர்களா” என்று ஊடகவியலாளர்கள் அந்த நபரிடம் கேட்கிறார்கள்.
வைரலான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் சூடான விவாதங்களைத் தூண்டியது. பாகிஸ்தான் தூதரகம் பயங்கரவாதத் தாக்குதலைக் கொண்டாடுவதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் @GovtofPakistan என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தைப் பார்வையிட முயலும்போது, "சட்டப்பூர்வமான கோரிக்கை காரணமாக இந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என்ற செய்தி காணப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்ட பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்தது. 1960ஆம் ஆண்டு சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.
அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை உடனடியாக மூடவும், SAARC விசா விலக்குத் திட்டத்தின் (SVES) கீழ் வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசா மூலம் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்களை திரும்பப் பெறவும இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த பதவிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. தூதரகங்களில் உள்ள ஐந்து துணை ஊழியர்களும் திரும்பப் பெறப்பட உள்ளனர்.
மே 1ஆம் தேதிக்குள் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகங்களில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.