
பத்மாவத் திரைப்படத்துக்கு முதலில் வந்த தவறான தகவலால் எதிர்ப்பு தெரிவித்தேன் என்றும் ஆனால் இது வரவேற்கவேண்டிய படம் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, இந்திய பெண்களின் வீரம், விவேகம், ஆற்றல், தர்மம் மற்றும் கற்பை உள்ளபடியாக எடுத்துச் சொல்லும் படம் இது. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை, தியாகத்தை இந்தியர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.
படம் வெளியாகும் முன் நானும் இந்த படத்தை கடுமையாக எதிர்த்தேன். படத்தில் ராணி பத்மாவதியை அலாவுதீன் கில்ஜி, காதலிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக வந்த தவறான தகவலை அடுத்து, இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலாவுதீன் கில்ஜியை பெருமைப்படுத்துவதாகவும், ராணி பத்மாவதியை அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வந்த தகவலை அடுத்து நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இந்த படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு, பெயர் மாற்றத்தோடு வெளியிடப்பட்ட இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இதில் இந்து பெண்கள் தர்மயுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் தீக்குளிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. ராணி பத்மாவதியின் கணவரை பின்னால் இருந்து கொல்வது போன்ற காட்சிகள் உண்மையானவை.
இந்த படத்தைப் பார்த்தால் போராட்டக்காரர்கள் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள். போராட்டக்காரர்களுடன் இந்த திரைப்படம் குறித்து கலந்துரையாடுவேன். படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.