மோடி அரசின் ஜி.எஸ்.டி.சட்டம் ஒரு ‘கேலிக்கூத்து’ - ப.சிதம்பரம் சாடல்...

First Published Jul 7, 2017, 8:10 AM IST
Highlights
p chithambaram says gst plan is an absurd


மத்தியில் ஆளும் மோடி அரசின் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்(ஜி.எஸ்.டி.) ஒரு கேலிக்கூத்து. மிக, மிக முழுமை பெறாத, அரைவேக்காட்டுத்தனமானது. இதை ஒருநாடு, ஒரு வரி என்று குறிப்பிட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நாடுமுழுவதும் மறைமுக வரிகளை நீக்கிவிட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒற்றை வரியை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த வரி அதிகமாக இருப்பதாகக் கூறி பெரும்பாலான மாநிலங்களில் வர்த்தகர்கள், தொழில்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியாதாவது-

காங்கிரஸ் கட்சி கூறிய ஜி.எஸ்.டி. வரி வேறு, மத்தியில் ஆளும் மோடி அரசு நடைமுறைப்படுத்திய ஜி.எஸ்.டி. வேறு. காங்கிரஸ் கட்சி ஜி.எஸ்.டி.யில் 18 சதவீதத்துக்கு மேல் வரியை அதிகப்படுத்தக்கூடாது என்று கூறியது. பெட்ரோல், மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளை ஜி,எஸ்.டிக்குள் கொண்டுவரக் கூறினோம்.

மோடி அரசின் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிச்சட்டம், மிக மிக முழுமை பெறாத , அரைவேக்காட்டு சட்டம். 7 வகையான வரிகள் உள்ளடக்கி, ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

0.25 சதவீதம், 3, 5, 12, 18, 28, 40 என 7 வரி விகிதங்கள் இருக்கிறது, இதில் மாநிலங்களுக்கும் சுயமாக வரிவிதிக்கும் அதிகாரம் இருக்கும் போதும் இன்னும் வரி கூடுதலாக உயரும். பின் எப்படி ஜி.எஸ்.டி.யை ஒரு நாடு, ஒரு வரி என்று கூறுவீர்கள்?.

ஜி.எஸ்.டி. வரி எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கவனிக்கும். சிறு, குறு வணிகர்கள், நுகர்வோர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில்செய்பவர்கள் ஆகியோரின் குறைகள், அச்சங்களை கேட்டு அறியும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஜி.எஸ்.டி. வரியை தவறாகப் பயன்படுத்தி, லாபம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நாங்கள் கண்காணிப்போம். ஜி.எஸ்.டி.யின் உண்மையான கூறுகளை நாங்கள் வௌிப்படுத்துவோம்.

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தும் போது, அதிகாரிகளும் முறையாக தயாராகவில்லை, வர்த்தகர்களும், தொழில்துறையினரும் தயாராகவே இல்லை. வரியை அமல்படுத்துவதை 2 மாதங்கள் தள்ளி வைத்து, ஜி.எஸ்.டி.என். நெட்வொர்க்கைசோதனை முறையாக செயல்படுத்தி இருக்க வேண்டும்.

நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் நடத்தி, காங்கிரஸ் கொண்டுவர நினைத்த ஜி.எஸ்.டி. குறித்தும், உண்மையான ஜி.எஸ்.டி. கொண்டு வரவும் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!