
இ.பி.எப்.ஓ. அமைப்பில் உள்ள 4 கோடி உறுப்பினர்கள் இனி தங்களின் பி.எப். பணத்தில் இருந்து சொந்த வீடு வாங்க 90 சதவீதம் வரை எடுக்கலாம். அதை மாதத் தவணையாக வங்கிக்கணக்கு மூலம் செலுத்த முடியும்.
இது குறித்து பி.எப். அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இ.பி.எப்.ஓ. அமைப்பு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து, 68பி.டி. என்ற ஒரு பிரிவை இணைத்து இருக்கிறது. இதன் மூலம் பி.எப். உறுப்பினர்கள் தங்கள் பணத்தில் இருந்து 90 சதவீதத்தை எடுத்து வீடு வாங்கிக்கொள்ளலாம். அதை மாதத் தவணையாகச் செலுத்தலாம்.
இந்த திட்டத்தின்படி, பி.எப். உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுறவு மையம் அல்லது வீட்டு வசதி வாரியத்தில் சேர்ந்து தங்கள் பி.எப் பணத்தை 90 சதவீதம் எடுத்து புதிய வீடு வாங்கலாம், அல்லது வீடு கட்டலாம், இடம் வாங்கலாம்.
இந்த திட்டத்தில் வீடு வாங்கியபின், அதற்குரிய பணத்தை மாதத் தவணையாக செலுத்தலாம். வட்டியை அரசே கூட செலுத்தலாம். இந்த வசதி பி.எப். அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பி.எப். அமைப்பில் ஒரு உறுப்பினர் ஒருவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணம் செலுத்தி இருக்க வேண்டியது அவசியமாகும்’’ எனத் தெரிவித்தார்.