தடம் மாறுகிறது ரயில்வே - தனியார் கைக்கு மாற்றம்

First Published Jan 28, 2017, 12:47 PM IST
Highlights


நாடுமுழுவதும் நஷ்டத்தில்  இருக்கும் ரெயில்வே வழித்தடங்கள், ரெயில்கள், இருப்புப்பாதைகளை கார்ப்பரேட்   நிறுவனங்களுக்கு குத்தகைக்கு(லீஸ்) விட ரெயில்வே துறை அமைச்சகம்  முடிவு செய்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய ரெயில் வழிப்பாதையைக் கொண்டுள்ள இந்திய ரெயில்வே துறைக்கு முதல் முறையாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கால்பதிக்க உள்ளன. 

அதில் முக்கியமானது நீலகிரி(ஊட்டி) மலைப்பாதை ரெயில் . இந்த ரெயில், பாதை பராமரிப்பு, டிக்கெட் கட்டணம், இயக்குதல், பணியாளர் மேலாண்மை உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற இருக்கிறது. 

மேலும்இதுபோன்ற பல மலைப்பாதை ரெயில்கள், பாதைகளை  குத்தகைக்கு விட்டு, அந்த பாதைகளை சீரமைத்தல், ரெயில் இயக்குதல் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களே மேற்கொள்ள உள்ளன.  

நஷ்டத்தில் இருந்து தப்பிக்கவும்,  தேவையில்லாத செலவுகளை குறைக்கவும், ஆட்குறைப்பு மேற்கொள்ளவும் ரெயில்வே துறை இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 

நாடுமுழுவதும் நஷ்டத்தில் இயங்கும் கல்கா, சிம்லா,  சிலிகுரி, டார்ஜ்லிங், நீலகிரி, இமயமலையில் உள்ள காங்கரா வேலி, மராட்டியத்தில் உள்ள நீரல் மற்றும் மாதரேயன் பாதை ஆகிய பாதைகள், ரெயில்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக லீசுக்கு விடப்படுகின்றன. 

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இயக்கப்பட்டுவரும் மலைரெயில்கள் பெரும் பான்மையானவை நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் பராமரிப்பு செலவும், இயக்கும் செலவும் மிக அதிகம்.  மீட்டர் கேஜ் பாதையாக இருக்கும் இந்த பாதைகளாக இருக்கும் இவற்றால், ரெயில்வே துறைக்கு லாபம் ஏதும் இல்லை.

ஆதலால், இந்த ரெயில்பாதைகள், ரெயில் இயக்குதல், பராமரிப்பு, பாதைகள் பராமரிப்பு ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகளும் இது தொடர்பாக வந்துள்ளன. நாங்கள் குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள மலைப்பாதைகள் அனைத்தும் யுனெஸ்கோ அறிவித்த சர்வதேச வழித்தடங்களாகும். இதை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள்  நன்றாக செயல்பட இது சிறந்த வாய்ப்பாக அமையும். 

ரெயில்வே துறையில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ. 33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். முதல்கட்டமாக இதுபோன்ற வழித்தடங்களில் தனியார் நிறுவனத்துக்கு வாய்ப்பு அளித்து அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும், அது அவர்களுக்கும், ரெயில்வே துறைக்கும் லாபம் அளிப்பதாக இருந்தால், எதிர்காலத்தில், தனியாருக்கு அதிகமான வாய்ப்புகள் அளிக்கப்படும் " எனத் தெரிவித்தார். 

click me!