
நாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இன்னும் அது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீட்டை தற்போது குறைத்துள்ளனர்.
இந்த நிதியாண்டில் நம் நாட்டின் பொருளாதாரத்தில் 6.1 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என முதலில் எஸ்.பி.ஐ. பொருளாதார நிபுணர்கள் கணித்து இருந்தனர்.
ஆனால் தற்போது பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என அவர்கள் தற்போது கூறுகின்றனர். மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் பொருளாதாரத்தில் 4.2 சதவீதம் அளவுக்குதான் வளர்ச்சி இருக்கும் எனவும் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வாகன விற்பனை குறைந்தது, விமான போக்குவரத்து சரிவு, மந்தமான முக்கிய 8 துறைகளின் உற்பத்தி மற்றும் கட்டுமானம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளில் முதலீடு குறைந்தது போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துள்ளதாக எஸ்.பி.ஐ. பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து பணக்கொள்கை தளர்வை மேற்கொண்டால் அது நிதி நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.