கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 
Published : Feb 10, 2017, 08:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சுருக்கம்

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதிக் கொள்கை குழு தனது 3-து நிதிக்கொள்கை அறிவிப்பில் கடனுக்கான வட்டியை மாற்றம் செய்யாமல் அறிவித்தது. இதையடுத்து, குறுகியகால கடனுக்கான வட்டி 6.25 சதவீதமாகத் தொடர்கிறது.

நிதிக்கொள்கை

ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிதி ஆண்டின் 6-வது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.

புதிய முறை

ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்ட புதிய குழுவில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர் ஆர்.காந்தி, ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மைக்கேல் பாத்ரா ஆகியோரும், மத்திய அரசு சார்பில் இந்திய புள்ளியியல் கழகத்தின் பேராசிரியர் சேதன் கதே, டெல்லி பொருளாதார கல்லூரியின் இயக்குநர் பாமி துவா மற்றும் ஐ.ஐ.எம். அகமதாபாத் பேராசிரியர் ரவீந்திர தோலகியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு தனது 3-வது அறிக்கையை நேற்று வெளியிட்டது.

மாற்றமில்லை

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ ரேட் 6.25 சதவீதமாகத் தொடர்கிறது. வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன், வைப்புத்தொகைக்கான வட்டி( ரிவர்ஸ் ரெப்போ ரேட் ) 5.75 சதவீதமாகவும் தொடர்ந்து மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் குறித்து அறிவிப்பு இல்லை என்பதால், ஏற்கனவே இருந்த 4 சதவீதமாக நீடிக்கிறது.

வளர்ச்சி குறைப்பு

இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, நவம்பர், டிசம்பர் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான தொழில்துறை நடவடிக்கைகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது. நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதில் தாமதம், மூலப்பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளிட்ட பல இடையூறுகள் ஏற்பட்டதால் பொருளாதார வளர்ச்சி பாதித்துள்ளது. அதேசமயம், அடுத்த நிதியாண்டில் 7.4 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கத்தைப் பொருத்தவரை, சில்லரை பணவீக்கம் 4.8சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அம்சங்கள்

* குறுகியகால கடனுக்கான வட்டி 6.25 சதவீதம்

* ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.75 சதவீதம்

* ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதம்

* பொருளாதார வளர்ச்சி 6.9 ஆக குறைப்பு

* பணவீக்கம் இலக்கு 2017-18ம் நிதியாண்டின் முதல்பாதியில் 4-4.5 வரை உயரலாம்

* கச்சாஎண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டு மதிப்பு, 7-வது ஊதிய குழு ஆகியவற்றால் பணவீக்கம் உயர வாய்ப்பு

* அடுத்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கை ஏப்ரல் 5-6

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு ஜாக்பாட்! டிட்வா புயல் நிவாரணமாக ரூ.3,700 கோடி நிதியுதவி.. இந்தியா அறிவிப்பு!
மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?