
ஏ.சி. ரெயில்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் போர்வை துவைக்காமல், சுகாதாரமற்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, சோதனை முயற்சியாக சில ஏ.சி. ரெயில்களில் பயணிகளுக்கு போர்வைகளை நிறுத்த ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில், ரெயில்வே குறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை தலைமை அலுவலர்(சி.ஏ.ஜி.) வௌியிட்ட அறிக்கையில், “ ரெயில்வேதுறை பயணிகளுக்கு அளிக்கும் போர்வை, தலையனை போன்றவை மாதக்கணக்கில் துவைக்கப்படாமல் அப்படியே அடுத்த பயணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவும் சாப்பிட தகுதியற்றது’’ எனத் தெரிவித்தது.
இந்த அறிக்கை நாடுமுழுவதும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏ.சி. ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வையை நிறுத்தும் திட்டத்தை சோதனை முயற்சியில் ரெயில்வே செயல்படுத்த உள்ளது. தற்போது ஏ.சி. ரெயில்களில் குறைந்தபட்சமாக 19 டிகிரி வரை குளிர்ந்த காற்று வைக்கப்படுகிறது.
இந்த குளிரை தாங்க முடியாமல்தான் பயணிகள் அனைவரும், போர்வையை போர்த்திக் தூங்குகிறார்கள். ஆதலால், ஏ.சி. ரெயிலில் உள்ள வெப்பநிலையை உயர்த்தினால், போர்வை தேவைப்படாது, பயணிகளும் போர்வை வழங்கத் தேவையில்லை என்று ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது இதற்காக ஏ.சி. ரெயில்களில் தற்போது 19 டிகிரி இருக்கும் வெப்பநிலையை 24 டிகிரிக்கு உயர்த்தி சில ரெயில்களில் செயல்படுத்த திட்மிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை, பெட்ஷீட், தலையனை ஆகியவற்றை சுத்தம் செய்ய ரெயில்வேக்கு ரூ.55 செலவாகிறது. ஆனால், இதற்காக பயணிகளிடம் ரூ.22 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
2 மாதத்துக்கு ஒருமுறை பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட், தலையனை, போர்வை ஆகியவற்றை சலவை செய்ய வேண்டும் என்பது விதி, ஆனால், இதை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.