
பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தூங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த நிறுவனம் வேக்பிட்(Wakefit). இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தினமும் அரைமணி நேரம் குட்டித்தூக்கம் போட அனுமதி அளித்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் ஊழியர்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டேன் என்றும் உறுதி அளித்துள்ளது. பொதுவாக மதிய நேரங்களில் உணவு உண்ட பிறகு அனைவருக்கும் கண்களில் தூக்கம் சொக்கும். அப்போது சற்று தூங்கினால் நல்லா இருக்கும் என்று எண்ணம் வரும். ஆனால் வேலைக்கு செல்வோர், அலுவலகத்தில் பணிபுரிவோர் அப்படி தூங்க முடியாது. அவசர அவசரமாக சப்பிட்டுவிட்டு வேலையை தொடர வேண்டும்.
இது பலருக்கும் ஒரு வித சிரமத்தை சோர்வையும் அளிக்கும். அந்த குறையை போக்கும் விதமாக, பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான வேக்பிட், தனது ஊழியர்கள் தினமும் மத்தியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அரைமணி நேரம் குட்டித் தூக்கம் எனப்படும் நேப் (Nap) எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அந்த இடைவெளியில் நிறுவனம் எந்த வேலைத் தொல்லையும் தர மாட்டோம் எனவும் உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக, நிறுவனத்தின் துணை நிறுவனர் சைத்தன்யா ராமலிங்க கௌடா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆறு ஆண்டுகளாக இந்த பிஸ்னஸ்சில் இருக்கும் நாங்கள், மிக முக்கியம் வாய்ந்த விஷயமான மத்திய நேர குட்டித் தூக்கத்தை கண்டுக்கொள்லாமல் விட்டுவிட்டோம்.
இன்றிலிருந்து இது சரி செய்யப்படுகிறது. நாசா வெளியிட்டுள்ள ஆய்வின்படி, 26 நிமிட குட்டி தூக்கம் என்பது, அந்நபரின் செயல்திறனை 33 சதவீதம் மேம்படுத்தும். இன்றைய காலத்தில் தூக்கத்திற்கு முக்கியத்துவம் தராததால் உடல் நலன் மிக மோசமான பாதிப்பை சந்திக்கிறது. இந்த மோசமான சூழலை எங்கள் நிறுவனத்தில் அனுமதிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். அண்மைக்காலமாக இந்தியாவின் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலன் மீது அக்கறை காட்டி வருகிறது. அந்த வகையில், சிரோதா நிறுவனத்தின் சிஇஓ, நிறுவனத்தின் வேலை தொடர்பான குறுஞ்செய்திகளை மாலை 6 மணிக்கு மேல் அனுப்பக் கூடாது என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.