மிரட்டும் பேய் மழை... மிதக்கும் மும்பை; வானிலை மையம் எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி!

First Published Jul 9, 2018, 4:40 PM IST
Highlights
Mumbai reels under torrential rain situation expected to worsen


மும்பையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மேம்பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி தானே, பால்கர், தாராவி உள்ளிட்ட இங்களிலும் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பாதுகாப்பு கருதி , ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் பல பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் கொலாபா பகுதியில் நேற்று இரவு 17 செ.மீட்டர். மழை பதிவாகியுள்ளது. இதனிடையே மும்பை, பால்கர், தானே உள்ளிட்ட இடங்களில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோவா, உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!