நடு ரோட்டில் ஆடைகளை களைந்து ரகளை! போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஆடைகளை அவிழ்த்த சகோதரிகள்!

First Published Jul 7, 2018, 12:56 PM IST
Highlights
Mumbai Crime Thieving Sisters Tear Off Clothes To Evade Arrest


வீடுகளின் பூட்டை உடைத்து, தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த அக்காள் – தங்கைகளை காவல்துறையினர் கைது செய்ய சென்றபோது, ஆடைகளை களைந்த பெண்கள் இருவரும் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  மும்பையில் ஜூகு, சாந்தாகுரூஸ், வன்ராய், கார், காட்கோபர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை  சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளது. அதேபோல், போரிவிலி கஸ்தூரிபா மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. பாதுகாப்பு மிகுந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையர்கள் நுழைந்தது எப்படி என்று தெரியாமல் குழம்பிப் போன காவல்துறையினர், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அதிர்ந்து போயினர். அடுக்குமாடி குடியிருப்புக்கு வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் போல, அக்கா – தங்கை இருவரும், வீட்டை பூட்டை உடைத்து, கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், ஒரு பெண் ஜோகேஸ்வரி பகுதியில் வசிக்கும் சரிதா என்றும், மற்றொரு பெண் குர்லாவைச் சேர்ந்த சுஜாதா என்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரும் அக்கா – தங்கை என்பதையும் கண்டறிந்த காவல்துறையினர், இருவரின் புகைப்படங்களையும் பல்வேறு காவல்நிலையங்களுக்கு அனுப்பி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், மலாடு டைமண்ட் மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 2 பெண்களை கண்டுள்ளனர். அவர்களை கண்காணிக்கத் தொடங்கிய காவலர்கள், காவல்நிலையத்தில் இருந்த புகைப்படங்களை வாட்ஸ்ஆப் மூலம் வரவழைத்து, இருவரும் கொள்ளைக்காரிகள் என்பதை உறுதி செய்தனர். கொள்ளைக்கார சகோதரிகளை சுற்றிவளைத்து கைது செய்ய முடிவெடுத்த காவல்துறையினர், மகளிர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, அவர்களை நெருங்கினர்.
 
காவல்துறையினர் தங்களை சுற்றிவளைத்துவிட்டதால், உஷாரான இருவரும் தங்களது மேலாடைகளை களைந்து, காவல்துறையினர் தங்களை மானபங்கம் செய்துவிட்டதாகக் கூறி கூச்சலிட்டு நாடகமாடத் தொடங்கினர். இதனால், அங்கு கூடிய பொதுமக்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என தெரியாமல் குழம்பிப் போயினர். பெண்கள் கூச்சலிட்டு, ரகளையில் ஈடுபட்டதால், அவர்களுக்கு சில பொதுமக்கள் உதவ முன்வந்ததால், காவல்துறையினரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கத் தொடங்கினர். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பெண் போலீசார், ஆடைகளை களைந்து ரகளையில் ஈடுபட்ட சகோதரிகளின் கொள்ளை சாகசங்களை பொதுமக்களுக்கு தெரிவித்து, சரிதா மற்றும் சுஜாதா ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இருவர் மீது கொள்ளை வழக்குகள் மட்டுமின்றி, காவல்துறையினர் மீது பழிபோட முயற்சித்த குற்றத்திற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.

click me!