
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஓளிர் திரையில், ஏழுமலையான் சாமி பாடலுக்கு பதிலாக திடீரென ஹிந்திப் படப் பாடல் ஒளிபரப்பான சம்பவம் பக்தர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
திருமலை திருப்பதி கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் அருகே வைக்கப்பட்டிருக்கும் எல்.டி.இ ஒளி திரையில் எப்பொழுதும் திருமலை ஏழுமலையான் பற்றிய பக்தி பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். இந்நிலையில் நேற்று மாலை அந்த திரையில் திடீரென்று ஹிந்திப் பட பாடல் ஒளிபரப்பானது. இதனை கண்டு பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் எல்.டி.இ திரையில் ஹிந்திப் பாடல் சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பானது. இதனை அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போனின் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதனிடயே பாடல்களை ஒளிபரப்பு செய்யும் பணியினை திருப்பதி தேவஸ்தானம் மேற்பார்வை செய்யாததாலும், அங்கு பணியில் இருந்தவர்களின் கவனக்குறைவாலும் இந்த சம்வம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது செட்டாப் பாக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.