
தமிழ்நாட்டில் 7 முக்கிய ஆறுகள் கடுமையாக மாசடைந்துள்ளதாக தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல தேசிய அளவிலும் நீர்நிலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
நீர்நிலை மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் ஏற்கனவே தள்ளப்பட்டுவிட்டன. எனினும் அரசுகள் அதில் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டியதால், பெரும்பாலான நீர்நிலைகள் அழிந்துவிட்டன.
மேலும் கழிவுகள் ஆறுகளில் கலப்பதால் ஆறுகளும் அசுத்தமடைந்து வருகின்றன. ஆனால், மக்களின் நீராதாரமாக விளங்கும் ஆறுகளை பராமரிக்காமல் அரசுகள் அலட்சியம் காட்டிவருகின்றன.
இந்நிலையில், வீட்டு கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் ஆகியவற்றால் நாட்டின் 275 ஆறுகள் வேகமாக மாசடைந்துவருவதாகவும் ஆறுகளை முறையாக பராமரிக்குமாறும் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
275 ஆறுகளில் தமிழகத்தில் உள்ள 7 முக்கிய ஆறுகளும் அடக்கம். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, பாலாறு, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா, சரபங்கா ஆகிய 7 ஆறுகளும் அதிகமாக மாசடைந்துள்ளதோடு, மேலும் வேகமாக மாசடைந்து வருவதாகவும் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
மேலும் ஆறுகளில் கழிவுகள் கலக்காமல் முறையாக பராமரிக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.