
ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை அனுமதியின்றி, நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டதற்கு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மோடி படம்
சில மாதங்கள் முன்பு, 4ஜி சேவையை தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதனை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்ய பல்வேறு நாளேடு மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தது. அந்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
சர்ச்சை
தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என, எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி எழுப்பின. மேலும், பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதும், பே-டிஎம் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்திலும் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்தது. இவ்விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியது.
விளம்பரத்தூதரா?
இந்நிலையில், நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், சமாஜ்வாதிக் கட்சி எம்.பி. நீரஜ் சேகர் வியாழக்கிழமை பேசுகையில், “ ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தியது அரசுக்கு தெரியுமா?. தனியார் நிறுவனங்களின் விளம்பரத் தூதராக பிரதமர் மோடி இருக்க சட்டம் ஏதும் அனுமதி அளித்து இருக்கிறதா. அல்லது பிரதமர் படத்தை பயன்படுத்திய அந்த நிறுவனங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை ஏதும் எடுத்ததா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
நடவடிக்கை
இதற்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் இணையமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் நேற்று முன் தினம் எழுத்துப்பூர்வமாகமக்களவையில் பதில் அளித்தார். அதில், “ பிரதமர் மோடியின் புகைப்படத்தை ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் பயன்படுத்திக்கொள்ள பிரதமர் அலுவலகம் அனுமதி ஏதும் தரவில்லை. லட்சிணை மற்றும் பெயர்கள் சட்டத்தின்படி, இதுவரை எந்தவிதமான புகார்களும் வந்து சேரவில்லை. அதேசமயம், பிரதமர் மோடியின் புகைப்படும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதில் விதிகள் மீறப்பட்டு இருப்பின்நடவடிக்ைக எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
ரூ.500 அபராதம்?
மத்திய நுகர்வோர் விவகாரத்தின் கீழ் வரும் லட்சிணை மற்றும் பெயர்கள் சட்டத்தின்படி மத்திய அரசின் குறிப்பிட்ட 3 டஜன் பெயர்கள்,லட்சினைகளை வர்த்தக ரீதியாக, வணிகநோக்கில் பயன்படுத்தும் முன் மத்திய அரசிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்பது அவசியமாகும்.
அந்த வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியை பயன்படுத்தியதற்காக அதிகபட்சமாக ரூ.500 அபராதம் விதிக்கப்படலாம் எனத் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.