பாலியல் குற்றத்தை மறைக்க 97 வக்கீல்கள்... ஆனாலும் அசராத பெண்பத்திரிகையாளர்

By vinoth kumarFirst Published Oct 16, 2018, 5:58 PM IST
Highlights

’தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வழக்குகளை சந்திக்க ஒன்று இரண்டல்ல 97 வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறார் முன்னாள் பத்திரிகை ஆசிரியரும் மத்திய அமைச்சருமான எம்.ஜே.அக்பர்.

’தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வழக்குகளை சந்திக்க ஒன்று இரண்டல்ல 97 வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறார் முன்னாள் பத்திரிகை ஆசிரியரும் மத்திய அமைச்சருமான எம்.ஜே.அக்பர். மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு பத்திரிகையாளர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இதில் பிரியாரமணி, கசாலா வகாப், ஷிமா ரகா, அஞ்சுபாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர். 

இந்த பாலியல் குற்றச்சாட்டுக்களை மத்திய இணை மந்திரி எம்.ஜே.அக்பர் மறுத்தார். அதோடு பதவி விலகவும் முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்தநிலையில் தன்மீது பாலியல் புகாரை முதலில் கூறிய பிரியாரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கை கொடுத்துள்ளார். 

பிரியாரமணி வேண்டுமென்றே தீய நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் புகார் கூறியுள்ளார். அவர் மீது உரிய அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவதூறு வழக்கு தொடர்பாக பெண் பத்திரிகையாளர் பிரியாரமணி கூறியதாவது:- எம்.ஜே.அக்பர் மீது நான் கூறிய பாலியல் குற்றச்சாட்டு உண்மையானது. முற்றிலும் உண்மை. தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பல்வேறு பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டை அரசியல் சதி என்று அவர் தெரிவித்து இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. என் மீது மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சந்திக்க தயார்’ என்கிறார் பிரியாரமணி.

click me!