ஆண்கள் தங்கள் மீசையை எடுத்துவிட்டு, பெண்களின் ஆடைகளை அணிந்து, நகைகளை அணிந்து, பெண் போல அலங்காரம் செய்து விளக்கு ஏந்தி வலம் வருவது சமயவிளக்கு திருவிழாவின் சிறப்பு அம்சம்.
ஒரு கோயிலில் நடைக்கும் தனித்துவமான திருவிழாவில், ஆண்கள் பாரம்பரிய உடையில் பெண்கள் போல அலங்கரித்துக்கொண்டு வந்து வழிபாடு செய்கிறார்கள். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் தான் இந்த திருவிழா நடக்கிறது.
இரண்டு நாள் வருடாந்திர திருவிழா மார்ச் 24ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது. விழாவின் பாரம்பரிய சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவுபெற்றது. ஆண்கள் தங்கள் மீசையை எடுத்துவிட்டு, பெண்களின் ஆடைகளை அணிந்து, நகைகளை அணிந்து, பெண் போல அலங்காரம் செய்து வலம் வந்தனர்.
பெண்கள் போன்ற தோற்றத்தில் உள்ள ஆண்கள் விளக்கு ஏற்றி ஊர்வலம் செல்வது இந்தத் திருவிழாவின் சிறப்பு அம்சம். இது அவர்களின் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பதற்காக தெய்வத்திற்கு அவர்கள் செய்யும் புனிதமான நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.
முன்னொரு காலத்தில் மாடுகளை மேய்க்கும் ஆண்களின் குழு ஒன்று பெண்களைப் போல வேடமிட்டு, கோயிலின் முதல் பூஜை செய்தனர். அது பின்னர் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவாக மாறியது. எல்லா வயது ஆண்களும் ஒவ்வொரு ஆண்டும் பெண் வேடமிட்டு கைகளில் விளக்குகளுடன் கோயிலுக்கு வருகிறார்கள்.
கொட்டாங்குளங்கரா தேவி கோவிவில் நடக்கும் இந்த சமயவிளக்கு திருவிழாவில் ஒரு குழு கல்லை சுற்றி விளையாடுவது வழக்கம். இந்த விழாவில் கலந்துகொள்வதால் கோயிலில் உள்ள கல்லில் இருக்கும் 'வனதுர்கா'வின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு மலையாள ஆண்டிலும் மீன மாதத்தில் பத்தாவது மற்றும் பதினொன்றாம் தேதிகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
சில பக்தர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பெண் போல அலங்காரம் செய்துகொண்டே வருகிறார்கள். சில பக்தர்கள் அலங்காரம் செய்ய, இரண்டு நாட்களுக்கு முன்பே கோயிலுக்கு வருகிறார்கள். அவர்கள் வசதிக்கான ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படுகிறது.