அரசு செலவில் கட்சி சின்னமா? சாட்டையைச் சுழற்றிய உச்ச நீதிமன்றம்!

By Asianet TamilFirst Published Feb 9, 2019, 5:02 PM IST
Highlights

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது தன் கட்சி சின்னமான யானையை அரசு செலவில் வைத்த பணத்தை மாயாவதி ஈடு செய்ய வேண்டியிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோது தன் கட்சி சின்னமான யானையை அரசு செலவில் வைத்த பணத்தை மாயாவதி ஈடு செய்ய வேண்டியிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மாயாவதி பதவியேற்ற பிறகு உ.பி.யில் பல்வேறு நகரங்களில் உள்ள பூங்காக்கள், பொது இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலையைப் பிரமாண்டமாக வைத்தார். மேலும் கட்சி நிறுவனர் கான்ஷிராம், மாயாவதியின் சிலைகளும் ஊர் முழுக்க வைக்கப்பட்டன. மாயாவதியின் இந்தச் சிலை அரசியல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

மாயாவதி ஆட்சியில் இருந்தபோதே, இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சுமார் 10 ஆண்டுகாலமாக கிடப்பில் இருக்கும் இந்த வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக முக்கியமான கருத்துகளை தெரிவித்தது. 

“இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக காலம் ஆகும். அதனால், தற்காலிகமாக சில கருத்துகளைத் தெரிவிக்கிறோம். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவ சிலைகளை பெருமளவில் நிறுவியதால் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடு செய்ய, சிலைகள் நிறுவியதற்கான செலவு தொகையை மாயாவதி அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த வழக்கு ஏப்ரல் மாதம் மீண்டும் விசாரிக்கப்படும். அப்போது விசாரணைக்கு பின் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும்.” என்று தெரிவித்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்தால் உ.பி.யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மாயாவதிக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பால் அக்கட்சித் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். 

click me!