கட்டப்பாவாக மாறிய தாதா அஜித் பவார்... ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த அரசியல்வாதி..!

By vinoth kumarFirst Published Nov 24, 2019, 11:30 AM IST
Highlights

மகாராஷ்டிராவில் நேற்று காலை ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை பெரும்பான்மை மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அஜித் பவாரை சிலர் துரோகி என்கிறார்கள், சிலர் முதுகில் குத்தி விட்டார் என்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் நேற்று காலை ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை பெரும்பான்மை மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் அஜித் பவாரை சிலர் துரோகி என்கிறார்கள், சிலர் முதுகில் குத்தி விட்டார் என்கிறார்கள். 

மகாராஷ்டிராவில் ஒரே நாள் இரவில் இத்தகைய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய அஜித் பவார், கட்சியின் மூத்த தலைவரான சரத் பவாரின் அண்ணன் ஆனந்த ராவின் மகன் ஆவார். அஜித் பவார், தன் தந்தை வழியை பின்பற்றாமல், சித்தப்பா வழியை பின்பற்றி, அரசியலுக்கு வந்தார். அவரை கட்சி தொண்டர்கள் 'தாதா' என்று அழைக்கின்றனர்.

கடந்த, 1991-ம் ஆண்டு பரமத்தி சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பரமத்தி, சரத் பவாரின் குடும்பத்தினரின் செல்வாக்கு பெற்ற தொகுதி என்பதால், அதில் எளிதாக வெற்றி பெற்ற அஜித் பவார், தொடர்ந்து 6-வது முறையாக அந்த தொகுதியை தக்க வைத்தார். அதற்கு பின், மகாராஷ்டிரா அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்தார். மகாராஷ்டிரா அரசில், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டார்.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், துணை முதல்வராக பதவி வகித்தார். அப்போது, நீர்ப்பாசனத் துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத் பவாருக்கு, தேசிய அளவில் செல்வாக்கு இருந்தாலும், மகாராஷ்டிராவில், கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் அஜித் பவார் வைத்திருந்தார். 

கடந்த மக்களவை தேர்தலின் போது, தன் மகன் பர்த் பவாரை, போட்டியிட வைத்தார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. 'என் மகன் வெற்றி பெறுவதை, சரத் பவார் விரும்பவில்லை' என, வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் சல சலப்பை ஏற்படுத்தினார், அஜித் பவார். சரத் பவாரின் மகள், சுப்ரியா சுலேயின் அரசியல் வளர்ச்சியும், அஜித் பவாருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சரத் பவார், தன் மகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தன்னை ஓரம் கட்டுவதாக, அவர் நினைத்தார். சமீபத்தில், சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நடந்தபோதே, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த, 25 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில், அஜித் பவாருக்கும், சரத் பவாருக்கும் தொடர்பு இருப்பதாக, அமலாக்க துறை இருவருக்கும் 'சம்மன்' அனுப்பியது. இதையடுத்து, அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்து அஜித் பவார் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, சரத் பவார் சமாதானப்படுத்தியதை அடுத்து ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கினார். சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்திய போதெல்லாம், அதில் பங்கேற்ற அஜித் பவார், மிகவும் அமைதியாகவே இருந்தார். தற்போது அவர் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் பவாரை சிலர் துரோகி என்கிறார்கள், சிலர் முதுகில் குத்தி விட்டார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பாலாம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

click me!