மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரவுள்ள தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா எனும் கூட்டணி அமைத்து ஓரணியில் திரண்டுள்ளன.
இருப்பினும், இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறவில்லை. குறிப்பாக, காங்கிரஸுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தம் 48 தொகுதிகள் கொந்த மகாராஷ்டிராவில், சிவசேனாவுக்கு (உத்தவ் அணி) 20, காங்கிரஸ் கட்சிக்கு 18, தேசியவாத காங்கிரஸுக்கு (சரத் பவார் அணி) 10 தொகுதிகள் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பஹுஜன் அகாடிக்கு சிவசேனாவிடம் இருந்து 2 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா (உத்தவ் தாக்கரே) - தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் கொண்ட மகாவிகாஸ் அகாடி, இந்தியா கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு சுமூகமாக எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 40 இடங்களில் அக்கட்சிகள் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்து விட்டன. ஆனால், 8 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. குறிப்பாக, தலைநகர் மும்பையில் உள்ள ஆறு மக்களவை தொகுதிகளில் மூன்றில் போட்டியிட காங்கிரஸ் கட்சியும், நான்கு தொகுதிகளில் போட்டியிட சிவசேனாவும் விருப்பம் தெரிவித்து வந்தன. இதுதொடர்பாக ராகுல் காந்தியும், உத்தவ் தாக்கரேவும் கடந்த வாரம் சுமார் 1 மணி நேரம் தொலைபேசியில் பேசினர். சரத்பவாருடனும் ராகுல் காந்தி பேசினார். இதையடுத்து, உடன்பாடி எட்டப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் 2024: ‘எனது முதல் ஓட்டு நாட்டுக்காக’ - தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம்!
தற்போதைய தகவல்களின்படி, மும்பையில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளில் நான்கில் சிவசேனா போட்டியிடும் என்றும், அதில் ஒன்றான மும்பை வடகிழக்கு தொகுதி வன்சித் பஹுஜன் அகாடிக்கு செல்லலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்து 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒன்றுபட்ட தேசியவாத காங்கிரஸ் 19 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதேசமயம், 25 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிராவில் எட்டப்பட்டுள்ள இந்த உடன்பாடு, எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மியுடன் பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் சுமூகமாக முடித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி 63, காங்கிரஸ் 17 என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.