
மத்திய பிரதேசத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தில் விவசாயிகள் கடந்த 1-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு சரியான கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மண்டசோர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, வன்முறை ஏற்பட்டு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஊரடங்கு உத்தரவு, பிறப்பிக்கப்பட்டு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கலவரம்,அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடு ஆகிய சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று தனது இல்லத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்காக, இன்று காலை 11 மணிக்கு தசரா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன்.
அங்கிருந்துதான் அரசுப்பணிகளை கவனிப்பேன். விவசாயிகள் அங்கு என்னை சந்தித்து, பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம்.
விவசாயிகள் போராட்டம், கலவரமாக மாறியது வேதனை அளிக்கிறது. வன்முறையை தூண்ட நினைத்தவர்களை தப்பவிட மாட்டோம். கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.