ஹர்தா பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆறுதல் கூறினார்
மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அம்மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் போபால், இந்தூர் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஹர்தா பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆறுதல் கூறினார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹர்தா தீ விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க வந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவியும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
undefined
இந்த விபத்து குறித்து முழு தகவல்களையும் வழங்கும்படி அதிகாரிகளிடம் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கேட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகள் எவை? பட்டியல் இதே!
வெடிவிபத்து நடந்த பைராகார்க் பகுதியில் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. வெடி விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 100 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், விபத்தின் போது அவ்வழியே சென்ற 30க்கும் மேற்பட்டோர் தீவிபத்தில் சிக்கியதாகவும், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் இழப்பீடாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.