மக்களவை தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனிடையே, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான உத்தேச தேதியை வெளியிட்டு தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல்களில் அழியாத மை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பின்னர், நடைபெற்ற முதல் தேர்தலின்போது, அனைத்து குடிமகன்களிடமும் அடையாள அட்டை இல்லாததால் வாக்கு செலுத்துவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதனை தடுக்கும் வகையில், முதன் முதலில் வாக்கு செலுத்தியவர்கள் விரலில் அழிக்க முடியாத மை பூசப்பட்டது.
இப்போது வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டாலும் கூட, கள்ள ஓட்டு போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், அழியாத மை பூசப்படுகிறது. நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது இடது கையின் ஆள்காட்டி விரலில் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும் அதிகாரி அழியா மையை பூசுவார். ஒரு வேளை இடது கையின் ஆள்காட்டி விரல் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அந்த விரலே இல்லையெனில் வேறு ஏதாவது விரலில் அந்த மையை வைக்க முடியும்.
2006ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, இடது கையின் ஆள்காட்டி விரலில் நகமும் சதையும் சேரும் இடத்தில் மை வைக்கப்பட்டு வந்தது. இதன் பின் 2006ஆம் ஆண்டிலிருந்து கோடு போல் நகத்திலிருந்து விரல் வரை நீட்டி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தேர்தலுக்கான அழியாத மை தயாரிக்கும் பணிகள் 1962ஆம் ஆண்டில் மைசூர் பெயிண்ட் அண்ட் வாரினிஷ் லிமிடெட் (MPVL) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை அந்நிறுவனத்திடம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேர்தல் நேரத்தில் இங்கிருந்து தான் மை விநியோகம் செய்யப்படுகிறது.
பக்கத்தில் வந்து உட்காருங்க.. நீருக்கடியில் செல்லும் மெட்ரோவில் மாணவர்களுடன் பயணித்த பிரதமர் மோடி!
அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான அழியாத மை தயாரிக்கும் பணியானது, மைசூர் பெயிண்ட் அண்ட் வாரினிஷ் லிமிடெட் (MPVL) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 26.55 லட்சம் குப்பிகள் தயாரித்து தருமாறு தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. இதன் மதிப்பு ரூ.55 கோடியாகும். மை தயாரிக்கும் பணிகள் 70 சதவீதம் முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள குப்பிகள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தயாராகிவிடும் எனவும் மைசூர் பெயிண்ட் அண்ட் வாரினிஷ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு 10 mg அழியாத மை குப்பி மூலம், தோராயமாக 700 வாக்காளர்களின் கைகளில் மை வைக்க முடியும். ஒரு குப்பியின் விலை ரூ.174. கடந்த தேர்தலில் ரூ.160 என்றிருந்தது. தற்போது ரூ.14 அதிகரித்துள்ளது.
தேர்தலுக்கு வைக்கப்படும் மையானது சில்வர் நைட்ரேட் என்ற ரசாயணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கையில் வைக்கும்போது புற ஊதா வெளிச்சம் படும்போது அதன் அடர்த்தி 7 முதல் 25 சதவீதம் மாறுகிறது. மை தோலின் செல்களில் கலந்துவிடுகிறது. இதனால்தான் அதை அழிக்க முடியவில்லை. அந்த மையானது குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த மை அழிய சுமார் 20 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறது. மை வைத்த இடத்தில் புதிய செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியான பின்னர் மை முற்றிலுமாக மறைகிறது.