கொடி காத்த குமரன் எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர் – சத்குரு புகழாரம்!

Published : Mar 31, 2022, 03:34 PM IST
கொடி காத்த குமரன் எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர் – சத்குரு புகழாரம்!

சுருக்கம்

”சுதந்திர போராட்டத்தின் போது தலையில் தாக்கப்பட்டு கீழே சரிந்த நிலையிலும், இந்திய தேசிய கொடியை கீழே விடாமல் காத்து நின்ற ’கொடி காத்த குமரன்’ (திருப்பூர் குமரன்) எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்” என சத்குரு புகழாரம் சூட்டியுள்ளார்.  

”சுதந்திர போராட்டத்தின் போது தலையில் தாக்கப்பட்டு கீழே சரிந்த நிலையிலும், இந்திய தேசிய கொடியை கீழே விடாமல் காத்து நின்ற ’கொடி காத்த குமரன்’ (திருப்பூர் குமரன்) எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்” என சத்குரு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி முதலியார் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர போராட்டம் தீவிரம் அடைய ஆரம்பித்த காலத்தில் திருப்பூர் குமரன் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

அவர் 1930-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்திலும் பங்கேற்றார். மேலும், தேச பந்து இளைஞர் அமைப்பையும் தொடங்கினார். அந்த அமைப்பு தமிழ்நாடு மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுக்க விரும்பிய ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது.

திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தி தொடர்ந்து மக்களை கவர்ந்து கொண்டு இருந்தார். மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு உட்பட தேசம் முழுவதும் பல இடங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் ஒருபகுதியாக, திருப்பூரில் நடந்த போராட்டத்தில் குமரன் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சுப்ரமணிய பாரதியின் ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே’ போன்ற தேசப் பற்று பாடல்களை பாடி கொண்டு இருந்தனர். மேலும், அப்போது தடை செய்யப்பட்டு இருந்த நமது இந்திய தேசிய கொடியையும் கரங்களில் ஏந்தி இருந்தனர். இதனால், கோபம் அடைந்த காவல் துறை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது லத்திகளை கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் பலர் காயம் அடைந்தனர். திருப்பூர் குமரனும் தலையில் அடிப்பட்டு கீழே சரிந்தார். அந்த நிலையிலும் அவர் நம் இந்திய தேசிய கொடி அவர் கரங்களில் இருந்து நழுவாமலும், தரையை தொடாமலும் காத்து நின்றார். அதற்கு மறுநாள் அவர் தனது 27-வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார். இதன்காரணமாக, அவர் இன்றும் கொடி காத்த குமரன் என்றே அழைக்கப்படுகிறார்.

இந்த நிகழ்வு திருப்பூரில் நொய்யல் ஆற்றங்கரைக்கு அருகே தான் நிகழ்ந்தது. அந்த நொய்யல் நதி ஈஷா யோகா மையத்திற்கு அருகில் தான் ஓடி கொண்டு இருக்கிறது. அதனால், கொடி காத்த குமரன் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்

இவ்வாறு அவர் வீடியோவில் பேசியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளது. இந்நிலையில், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் விதமாக, அவர்களை புகழ்ந்து சத்குரு ஏராளமான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட உள்ளார். அதில் முதல் வீடியோவாக திருப்பூர் குமரன் அவர்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், பகத் சிங், ஜல்காரி பாய், கொமரம் பீம் ஆகியோர் பற்றியும் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆபாச AI படங்களுக்கு ஆப்பு! எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு வார்னிங்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!