கேரளாவில் 18, 19, 20 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு !! 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட்!!

By Selvanayagam PFirst Published Jul 17, 2019, 9:51 AM IST
Highlights

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இடுக்கி, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட  6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு கேரளாவில் தென் மேற்கு பருவமழை சீசனின்போது  100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இடுக்கி, வயநாடு,மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த மழை வெள்ளத்தில் இருந்து கேரளா மாநிலம் மீண்டு வர வெகு காலம் ஆகும் என நினைத்திருந்தனர். ஆனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எடுத்த போர்க்கால நடவடிக்கையால் ஒரு சில மாதங்களிலிலேயே அம்மாநிலம் மீண்டெழுந்தது.

இந்நிலையில் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 8-ந்தேதி தான் தொடங்கியது. தொடக்கத்தில் தீவிரமாக பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து விட்டது.

.தென்மேற்கு பருவமழை மூலமே கேரளாவுக்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் வருகிற 18-ந்தேதி முதல் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளது.

கேரளாவில் உள்ள இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணுர், எர்ணாகுளம் மற்றும் திரிசூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இடுக்கி  (ஜூலை 17)  கோட்டயம் (ஜூலை 18), எர்ணாகுளம் (ஜூலை 19), பாலக்காடு ( ஜூலை 19 மற்றும் 20), கோழிக்கோடு (ஜூலை 20)  வயநாடு (ஜூலை 20), கண்ணூர் (ஜூலை 20) ஆகிய தினங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.  

கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.  

click me!