
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கேரளாவில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த இருவர் கோஷம் எழுப்பியவாறு, யெச்சூரியை தாக்க முயன்றனர்.
உடனடியாக அங்கிருந்த போலீசார், அவர்களை தடுத்து, அழைத்து சென்றனர். இதனால் அங்கு அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தாக்க முயன்ற இருவரையும் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஹிந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள யெச்சூரி, இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே யெச்சூரி தாக்கப்பட்டதைக் கண்டித்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் 4 இடங்களிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து கேரளாவில் அக்கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.