கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு கமிஷன் மூலம் 1.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகவும் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லப்போவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆளும் பாஜக ரூ.1.50 லட்சம் கோடியை சுருட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநில தேர்தல் சூடிபிடிக்கத் துவங்கியுள்ளது. மே 10ஆம் தேர்தல் நடக்கிறது. மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது பிரச்சாரத்தை கோலார் தொகுதியில் இருந்து துவக்கினார். இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மைசூரு மாவட்டத்தில் டி நரசிபுரா தாலுகாவில் இருக்கும் ஹெலவரஹண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், "மாநிலத்தில் 40 சதவீத அரசு கமிஷன் மூலம் உங்களை கொள்ளையடித்து இருக்கிறார்கள். எந்தவித அவமானமும் இல்லாமல் கொள்ளையடித்துள்ளனர். கான்ட்ராக்டர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த ஊழல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்" என்று குற்றம்சாட்டினார்.
"நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் இருந்து 8 கோடி ரூபாய் சோதனையில் பிடிபட்டது. எம்எம்ஏவை விசாரணை செய்வதற்குப் பதிலாக, அவர் அங்கும் இங்கும் உலாவி வந்தார். கர்நாடகாவில் இருந்து ரூ.1.50 லட்சம் கோடி சுருட்டப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை கொண்டு மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்திருந்தால் மக்களுக்கு பயனளித்து இருக்கும்." என்ற பிரியங்கா, காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மாநிலத்தில் நந்தினி பிராண்ட் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இவரது பிரச்சாரக் கூட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, முன்னாள் அமைச்சர் ஹெச்சி மகாதேவப்பா, எம்எல்ஏ யதிந்திரா சித்தராமையா ஆகியோரும் கலந்து கொண்டனர். இன்று கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி இருக்கும் பிரியங்கா காந்தி தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது, மைசூரு, சாம்ராஜ்நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஹவேரி மாட்டத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த ராகுல் காந்தி, "இந்தத் தேர்தலில் பாஜக 40 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக் கூடாது" எனத் தெரிவித்து இருந்தார்.
மைசூரு மாவட்டத்தில் இருக்கும் வருணா தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்துகொள்கிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் அமைச்சர் வி. சோமண்ணா போட்டியிடுகிறார். சாம்ராஜ்நகர் தொகுதியில் இருந்தும் சோமண்ணா போட்டியிடுகிறார். இன்று இரவு ஆர்.கே. நகர் தொகுதி பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வத்ரா பேசுகிறார்.