கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் டெல்லியில் இருந்து வந்து முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். மேலும், வரும் 29ஆம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ராகுல் காந்தியும் தனது பிரச்சாரத்தை ஏற்கனவே துவக்கிவிட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நேற்று தனது பிரச்சாரத்தை துவக்கினார். பாஜக கட்சி 1.50 லட்சம் கோடி அளவிற்கு ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மைசூரில் இருக்கும் பிரபல மைலாரி ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டார். அங்கு மொறு மொறு மசாலா தோசை மற்றும் மல்லிகை இட்லி சாப்பிட்டார். பின்னர் அந்த ஓட்டலில் இருந்த ஊழியர்களிடம் உரையாடினார். ஓட்டலின் சமையலறைக்கு சென்றார். ஊழியர்களிடம் தானும் தோசை சுட வேண்டும் கேட்டார். அவர்களும் சரி என்று கூற, தோசை ஊற்றினார். ஆனால், தோசையை திருப்பி போடுவதற்கு அவருக்கு வரவில்லை. உடன் இருந்த சமையல்காரர் உதவி செய்தார்.
இவருடன் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார், கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோரும் சென்று இருந்தனர். இதையடுத்து, அவர் மைசூரில் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். நேற்றைய பிரச்சாரத்திற்கு பின்னர் ஹனூரில் இருக்கும் ஓட்டல் ரேடிசன் ப்ளு பிளாசாவில் தங்கி இருந்தார்.