திட்டத்திற்கு பெயர் மாற்றம்! அம்பேத்கரை அவமதித்துவிட்டார் முதலமைச்சர்! பரபரப்பு புகார்!

By vinoth kumarFirst Published Oct 21, 2018, 11:22 AM IST
Highlights

பிரமாண்ட நீர் சேமிப்பு திட்டத்திற்கு சூட்டியிருந்த அம்பேத்கர் பெயரை மாற்றியதன் மூலம் அம்பேத்கரை முதலமைச்சர் அவமதித்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

பிரமாண்ட நீர் சேமிப்பு திட்டத்திற்கு சூட்டியிருந்த அம்பேத்கர் பெயரை மாற்றியதன் மூலம் அம்பேத்கரை முதலமைச்சர் அவமதித்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாட்டிலேயே மராட்டியத்திற்கு பிறகு வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தெலுங்கானா. தெலுங்கானாவில் வறட்சி காரணமாக உயிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகம். இந்த நிலையை போக்கி விவசாயத்திற்கு உயிரூட்டவும், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு எட்டவும் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டது அம்பேத்கர் நீர் சேமிப்பு திட்டம். 

சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் படி ஜெய்சங்கர் பூபல்லி எனும் மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா எனும் இடத்தில் பிரமாண்ட அணை போன்ற ஒரு அமைப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு கோதாவரி மற்றும் அதன் துணை நதிகளில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. பின்னர் அணையில் இருக்கும் தண்ணீர் கால்வாயக்ள், சுரங்கப்பாதைகள் மற்றும் குழாய்கள் மூலம் தெலுங்கானாவின் 13 மாவட்டங்களில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் திட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 

இதன் மூலம் தெலுங்கானாவில் உள்ள 20 மாவட்டங்களும் பயன்பெறும். சுமார் 24 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களின் குடி நீர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும். 25 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் துவங்கினாலும் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வந்த பிறகு 80 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் விரிவாக்கப்பட்டது. 

ஆனால் திட்டத்திற்கு சூட்டப்பட்ட அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்டதுன் புதிதாக காலேஷ்வரம் என்றும் பெயர் மாற்றப்பட்டது. அம்பேத்கர் பெயரை ஒரு மிகப்பெரிய திட்டத்தில் இருந்து நீக்கி அவமதித்துவிட்டதாக தற்போது சந்திரசேகர ராவுக்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூட தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அம்பேத்கரை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவமதித்துவிட்டதாகவே குற்றஞ்சாட்டி பேசினார்.

click me!