அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவுள்ளதால், தனது 30 ஆண்டுகால மவுன விரதத்தை ஜார்கண்டை சேர்ந்த பெண் ஒருவர் முடிவுக்கு கொண்டு வரவுள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், ஜார்கண்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது 30 ஆண்டுகால மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வரவுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டியான சரஸ்வதி தேவி என்பவர், ஜனவரி 22ஆம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதும் தனது மவுன விரதத்தை முறித்துக் கொள்ளவுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் எனும் தனது கனவு நனவாவதால் தனது 30 ஆண்டுகால மவுனத்தை அந்த மூதாட்டி முடிவுக்கு கொண்டு வரவுள்ளார்.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் சரஸ்வதி தேவி தனது மவுன விரத சபதத்தை தொடங்கியதாகவும், ராமர் கோவில் திறக்கப்படும் போது மட்டுமே அச்சபதத்தை உடைப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ராமர் கோயில் திறப்பு விழாவை காண சரஸ்வதி தேவி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அயோத்தியில் 'மௌனி மாதா' என்று பிரபலமாக அழைக்கப்படும் சரஸ்வதி தேவி, சைகை மொழி மூலம் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வார். ஆனால் வாக்கியங்கள் சிக்கலாக இருந்தால் அதனை எழுதி காட்டுவார் என்கிறார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டில் மவுன விரதத்தை பகுதியாக முடித்துக் கொண்ட அந்த மூதாட்டி, தினமும் மதியம் 1 மணி நேரம் மட்டும் பேசி வந்தார். ஆனால், ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நாளில் இருந்து மீண்டும் மவுன விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்.
“டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் வரை மவுனத்தைக் கடைப்பிடிப்பதாக என் அம்மா சபதம் எடுத்தார். கோயிலின் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.” என சரஸ்வதி தேவியின் இளைய மகளான 55 வயதான ஹரே ராம் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கங்கா-சட்லெஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு அயோத்திக்கு அவர் புறப்பட்டார். ஜனவரி 22 ஆம் தேதி அவர் தனது மவுன விரதத்தை கலைப்பார் எனவும் ஹரே ராம் அகர்வால் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள சரஸ்வதி தேவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மஹந்த் நிருத்ய கோபால் தாஸின் சீடர்கள் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் எனவும் ஹரே ராம் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சரஸ்வதி தேவிக்கு நான்கு பெண்கள் உட்பட எட்டு குழந்தைகள் உள்ளனர். 1986ஆம் ஆண்டு தனது கணவர் தேவகினந்தன் அகர்வால் இறந்த பிறகு, கடவுள் ராமருக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சரஸ்வதி தேவி. தனது பெரும்பாலான நேரத்தை யாத்திரைகளிலேயே கழித்தார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!
கோல் இந்தியாவின், அங்கமான பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் எனும் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும், தனது இரண்டாவது மூத்த மகன் நந்த் லால் அகர்வாலுடன் சரஸ்வது தேவி வசித்து வருகிறார். நந்த் லாலின் மனைவி இன்னு அகர்வால் (53), கூறுகையில், திருமணமான சில மாதங்களிலேயே தனது மாமியார் மவுன விரதத்தை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். “பெரும்பாலும் சைகை மொழியிலேயே பேசுவார். அதனை நாங்கள் புரிந்து கொள்வோம். சிக்கலான வாக்கியங்களை எழுதிக்காட்டுவார்.” என அவர் கூறினார்.
“பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, என் மாமியார் அயோத்திக்கு சென்று ராமர் கோவில் கட்டப்படும் வரை 'மவுன விரதம்' உறுதிமொழி எடுத்தார். அவர் 23 மணி நேரம் அமைதியாக இருந்தார், ஒரு மணி நேரம் மட்டும் பேசுவார். மீதமுள்ள நேரத்தில், எங்களுடன் பேனா மற்றும் காகிதம் மூலம் தொடர்பு கொள்வார்.” என இன்னு அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால், ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதும் மீண்டும் நாள் முழுவதும் மவுன விரதம் இருந்தார். கோவில் திறக்கப்பட்ட பிறகே தான் பேசுவதாகவும் உறுதியளித்தார் எனவும் இன்னு அகர்வால் தெரிவித்துள்ளார்.
கடவுள் ராமர் தனது வனவாசத்தின் பெரும்பகுதியைக் கழித்ததாக நம்பப்படும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்ரகூடில் கடந்த 2001ஆம் ஆண்டில் ஏழு மாதங்கள் சரஸ்வதி தேவி தவம் புரிந்துள்ளார். மேலும், அவர் நாடு முழுவதும் புனித யாத்திரையும் சென்றுள்ளார். தினமும் அதிகாலை 4 மணியளவில் எழுந்திருக்கும் சரஸ்வதி, காலையில் ஆறு முதல் ஏழு மணி நேரம் தியானம் மேற்கொள்வார் என அவரது மருமகள் இன்னு அகர்வால் தெரிவித்துள்ளார்.
சந்தியா ஆரத்திக்குப் பிறகு மாலையில் ராமாயணம், பகவத் கீதை போன்ற புத்தகங்களைப் படிப்பார் எனவும் அவர் கூறினார். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்பார். காலையிலும் மாலையிலும் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவார். அரிசி, பருப்பு மற்றும் ரொட்டி ஆகியவற்றைக் உள்ளடக்கிய சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார் எனவும் அவரது மருமகள் இன்னு அகர்வால் தெரிவித்துள்ளார்.