அதிரடியாக குறைக்கப்பட்ட ரயில் கட்டணங்கள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 3:00 PM IST
Highlights

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை வரி வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சேவை வரி கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ரயிலில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்யும் வசதியை தற்போது ஆன்லைன் மூலமாக செய்து வருகின்றனர். இந்த வசதிக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டிருந்தது. 

மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஏசி இல்லாத வகுப்புகளுக்கு 20 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சேவைக் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சேவைக் கட்டணம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு வசூலிக்கப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 1 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ஏசி இல்லாத வகுப்புகளுக்கு 15 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு 30 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் சேவைக்கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி தொகையும் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக பொதுமக்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து சேவைக்கட்டண தொகையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி ஏசி இல்லாத வகுப்புகளுக்கு நபர் ஒன்றிற்கு 10 ரூபாயும், ஏசி வகுப்புகளுக்கு நபர் ஒன்றிற்கு 20 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு வழக்கம் போல வழங்கப்படும் சலுகைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

click me!