கொரோனா எதிரொலி.. மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து.. இந்திய ரயில்வே அதிரடி

By karthikeyan VFirst Published Mar 22, 2020, 1:25 PM IST
Highlights

கொரோனாவை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நிலையில், மார்ச் 31ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.
 

கொரோனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுதலே முக்கியமான ஒன்று. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் மும்பையில் ஒரு முதியவரும் பீஹாரில் 38 வயது இளைஞரும் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வந்தாலும், இந்தியாவில் இன்னும் பொதுச்சமூகத்தில் கொரோனா பரவவில்லை. எனவே பொதுச்சமூகத்தில் பரவுவதற்கு முன்பாக, அதை கட்டுப்படுத்தி, தடுத்து விரட்டுவது முக்கியம்.

கொரோனா பாதிப்பு பொதுச்சமூகத்திற்கு பரவுவதற்கு முந்தைய கட்டத்தில் இருக்கும் இந்தியா, இதற்கு மேல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. அந்தவகையில், இன்று ஒருநாள், இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் இன்று ஊரடங்கை பின்பற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

சுய ஊரடங்கை முன்னிட்டு இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி இயங்கியிருக்க வேண்டிய அனைத்து ரயில்களும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக, வரும் 31ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சரக்கு ரயில் சேவை தொடர்ந்து செயல்படும். ஏனெனில் அத்தியாவசியப் பொருட்களை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டுமென்பதால், சரக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படவில்லை. 

ஏற்கனவே ரயில்களில் பயணிப்பவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் கூட, அவர் வந்த பெட்டியில் அவருடன் கூட வந்தவர்கள் உட்பட அனைவரையும் பரிசோதித்து தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அந்த ரிஸ்க்குகளை தடுப்பதற்காக, பயணிகள் ரயில் சேவை வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

click me!