
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ அதிகாரியை கடத்திய தீவிரவாதிகள், அவரை சுட்டுக்கொன்று புதரில் வீசிச் சென்றனர்.
உமர் பயாஸ் எனும் ராணுவ லெப்டினென்ட்அதிகாரி தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்புகையில் அவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
22 வயதான லெப்டினென்ட் அதிகாரி உமர் பயாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் ராணுவப் பணியில் சேர்ந்தார். ஜம்முவில் உள்ள அக்னூர் பகுதியில் பீரங்கிப் படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், காஷ்மீரின் தெற்குப்பகுதியில் உள்ள சோபியான் மாரட்டத்தில் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்துக்காக உமர் பயாஸ் நேற்றுமுன்தினம் சென்றார்.
அப்போது அங்கு வந்த 5 முதல் 6 தீவிரவாதிகள் உமரை கடத்தி இருக்கலாம். அவரை சுட்டுக்கொன்று, அருகில் உள்ள ஹர்மெயின் பகுதியில் வீசியுள்ளனர். உமரின்உடலை நேற்று காலை, குண்டுகாயத்துடன் மீட்டோம். இவ்வாறு தெரிவித்தனர்.
ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இது மிகவும் கொடூரமான செயல். அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் உமரை கடத்தி, கொலை செய்துள்ளனர். திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பியதால், உமரிடம் கையில் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை.
உமரின் வீரமரணத்துக்கு ராணுவம் தலைவணங்குகிறது. உமரின் குடும்பத்துக்கு ராணுவம் துணை நிற்கும். இந்த கொடுஞ்செயலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.
கோழைத்தனமானது, கொடூரமானது
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அருண்ஜெட்லி டுவிட்டரில் வௌியிட்டபதிவில், “ லெப்டினென்ட் அதிகாரி உமர் பயாஸ் கடத்தி கொல்லப்பட்டது கொடூரமானது, கோழைத்தனமானது. இந்த இளம் அதிகாரி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்’’ எனத் தெரிவித்தார்.