குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உதவிய முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறது இந்திய விமானப்படை.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேரியர் லிடர் உள்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டனர். ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்பா சத்திரம் பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.நேற்று டெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்திய விமானப்படை தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறது. இந்திய விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த பதிவில், ‘துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தின் மீட்பு பணிகளுக்கு உடனடியாக உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மீட்பு பணிக்கு உதவிய நீலகிரி ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கட்டேரி கிராம பொதுமக்கள் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.