இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..! உலகளவில் 3ம் இடத்தை நெருங்கும் அபாயம்

By karthikeyan VFirst Published Jul 2, 2020, 6:37 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பில் 3ம் இடத்தை நோக்கி நகர்கிறது.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பில் 3ம் இடத்தை நோக்கி நகர்கிறது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து உலகம் முழுதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்திவரும் கொரோனா, இந்தியாவில் தற்போது கோரமுகத்தை காட்டிவருகிறது. மார்ச்-ஏப்ரலில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த இத்தாலி, பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தான் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

உலகளவில் இதுவரை ஒரு கோடியே 83 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 27 லட்சத்து 82 ஆயிரம் பேரும், அதற்கடுத்தபடியாக பிரேசிலில் 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாமிடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 6 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே, தினமும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிவருகிறது. அதனால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக எகிறுகிறது. 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தான் கொரோனா பரவல் மிகக்கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 94,049ஆகவும் டெல்லியில் 89,802ஆகவும் உள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், 6 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்யாவை விட வெறும் 60 ஆயிரம் மட்டுமே பின் தங்கியிருக்கிறது இந்தியா. தினமும் சராசரியாக 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிவரும் நிலையில், இன்னும் சில தினங்களில் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா மூன்றாமிடத்தை பிடித்துவிடும்.
 

click me!