மக்களவை தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டயிடவுள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்
மக்களவைத் தேர்தல் 2024இல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போது வரை தொகுதிப் பங்கீடு கவலை தரும் விஷயமாக உள்ளது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.
கிரிக்கெட் ஊழல் தொடர்பாக ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியினுடைய தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்தியா கூட்டணியின் அனைத்து கூட்டங்களிலும் தவறாமல் அவர் பங்கேற்று வருகிறார்.
இருப்பினும், இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லாதது குறித்து ஃபரூக் அப்துல்லா கடந்த மாதம் கவலை தெரிவித்திருந்தார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தொகுதி உடன்பாட்டை விரைவாக எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், தேசத்தைப் பாதுகாக்க, நமது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு பிப்.,19ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!
இந்த சூழலில், மக்களவை தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் தனித்து போட்டயிடவுள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து கூறிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த வரம்புகள் உள்ளன. தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியின் அங்கமாக இருந்து வருகின்றன. அது தொடரும்.” என்றார்.
ஃபரூக் அப்துல்லாவின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டி என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் பிடியில் உள்ளார். அதன் தொடர்ச்சியாக, ஃபரூக் அப்துல்லாவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.