
பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கேரளாவில் பிளாஸ்டிக் ஸ்டிரா பயன்பாட்டுக்கு எதிராக உணவு விடுதிகள் களமிறங்கியுள்ளன.
கடந்த 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கேரளாவில் உள்ள ஹோட்டல்கள் பிளாஸ்டிக் ஸ்டிராக்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வந்துள்ளன.
‘கேரளா டிராவல் மார்ட்’டில் இணைந்துள்ள 650 ஹோட்டல்கள் உட்பட ஏராளமான ஹோட்டல்கள் பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்படுத்த வேண்டாம் என்பது குறித்த விழிப்புணர்வை தொடங்கியுள்ளன.
கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியின் போது கிடைக்கும் 10 முக்கிய மக்காப் பொருட்களில் ஸ்டிராவும் ஒன்று. இந்த சின்னஞ்சிய ஸ்டிரா மக்குவதற்கு சுமார் 200 ஆண்டுகள் ஆகும் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால் அது தான் உண்மை.
கேரளாவில் ஹோட்டல்கள் சங்க அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஸ்டிராக்களுக்கு எதிரான விழிப்புணர்வை சோதனை அடிப்படையில் நடத்த முடிவு செய்துள்ளோம்.
‘‘இது ஒரு நாள் விழிப்புணர்வு பிரசாரம்தான் என்றாலும், இதனை தொடர்ந்து கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம். நுகர்வோர் உடனடியாக மாற வேண்டும் என்று நினைத்தால் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகவே மாற்ற முடியும்’’ என்றார்.
பிளாஸ்டிக் ஸ்டிராக்களுக்கு பதிலாக மூங்கில் குச்சிகளைக் கொண்டு செய்யப்படும் ஸ்டிராக்களைப் பயன்படுத்தவும் அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.