கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் இனி ஆயுளுக்கும் களிதான்... மத்திய அரசு அதிரடி முடிவு!

By manimegalai aFirst Published Oct 13, 2019, 10:14 AM IST
Highlights

தற்காப்புக்காகவும், அச்சறுத்தல் காரணம் என்று கூறியும் துப்பாக்கி லைசென்ஸை வாங்கி வைத்திருக்கிறார்கள். லைசென்ஸ் பெற்றது போக நாடு முழுவதும் ஏராளமான கள்ளத்துப்பாக்கிகளும் புழக்கத்தில் உள்ளது. லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது.

கள்ளத் துப்பாக்கியை இனி வைத்திருந்தாலோ, கடத்தினாலோ ஆயுள் சிறை அளிக்கும் வகையில் சட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 35 லட்சம் துப்பாக்கி லைசென்ஸ்கள்  வழங்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 13 லட்சம் பேர் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் 3.7 லட்சம் பேரும், பஞ்சாபில் 3.6 லட்சம் பேரும் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தற்காப்புக்காகவும், அச்சறுத்தல் காரணம் என்று கூறியும் துப்பாக்கி லைசென்ஸை வாங்கி வைத்திருக்கிறார்கள். லைசென்ஸ் பெற்றது போக நாடு முழுவதும் ஏராளமான கள்ளத்துப்பாக்கிகளும் புழக்கத்தில் உள்ளது. லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்தால் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு  குறைந்தபட்சம் 7 ஆண்டுகளும், அதிகபட்சமாக 14 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

 
60 ஆண்டுகள் பழமையான சட்டத்தை மாற்ற முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஆயுதங்கள் சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துவது, நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்வது, ஆயுதங்களைக் கொண்டு திட்டமிட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு கடும் தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஈடுபடுவோருக்கு மட்டும் 3 துப்பாகிகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கனவே 3 துப்பாக்கிகள் வைத்துகொள்ள அனுமதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இனி 2 துப்பாகிகளுக்கு மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும். 
இந்தச் சட்டத்தில் ஆயுதங்களை தயாரிப்பவர்களையும் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வெளி நாடுகளிலிருந்து கள்ளத்தனமான துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்களை இறக்குமதி செய்து, இங்கே விற்பனை செய்வோருக்கும் தண்டனையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தண்டனை காலத்தை 14 ஆண்டுகளாக உயர்த்த புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது. கூட்டாக இயங்கும் குற்றவாளி குழுக்களில் உள்ள ஒருவர் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தினால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!