
IAF Chief AP Singh Meets PM modi: பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்ட இந்தியா தயாராகி வருகிறது. இதற்காக முப்படைகளும் தயாராக உள்ளன. இந்த நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
விமானப்படைத் தளபதி பிரதமர் மோடி சந்திப்பு
சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்த நிலையில், பிரதமர் மோடியும், விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிஙகும் விமானப்படையின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பிரதமர் மோடி முன்னதாக இந்திய கடற்படைத் தளபதி மற்றும் ராணுவத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இப்போது விமானப்படைத் தளபதியையும் சந்தித்து பேசியுள்ளார்.
முப்படை தளபதிகளுடனும் ஆலோசனை
கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து அரபிக் கடலில் உள்ள முக்கியமான கடல் பாதைகளின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து விளக்கியிருந்தார். இந்த வார தொடக்கத்தில், பிரதமர் மோடி டெல்லியில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்று பயங்கரவாதிகளை களையெடுத்தனர். அதேபோல் ஒரு மிகப்பெரும் சம்பவம் நடத்த இந்தியா தயராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் எல்லையோர மக்கள் பாதுகாப்பாக இருக்காவும், 2 மாதத்துக்கு தேவையான உணவுப்பொருட்களை சேமித்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நமது வீரர்கள் தக்க பதிலடி
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மிக முக்கியமாக பாகிஸ்தான் உடன் செய்து கொண்ட சிநதுநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வழக்கமாகிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.