மக்களை தான் சந்திக்கிறேன் தீவிரவாதிகளை அல்ல என்றும், ஆளுநர் என்றால் நாராயணசாமிக்கு அலர்ஜியாகி விடுகிறது. அதுவும் துணைநிலை ஆளுநராக இருந்தால் கூடுதல் அலர்ஜியாகி விடுகிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய கருவியாக்கம் மேலாண்மை துறை சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை பயன்படுத்தி ஒருங்கிணைப்பு பயிற்சி திட்டம் துவக்க விழா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மக்கள் சந்திப்பு குறித்து நாராயணசாமி விமர்சனத்திற்கு பதில் அளிக்கையில், மக்களுக்காக தான் எல்லா அலுவலகங்களும் இருக்கின்றது. மக்களை சந்திக்கக் கூடாது என்று ஒரு தலைவர் சொன்னால் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும், எனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்ல அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஆளுநர் என்பவர் மக்களிடம் அனுசரணையாக இருப்பதற்கு யாரும் தடை சொல்ல முடியாது என்பது எனது கருத்து, நான் இதை மக்களிடமே விட்டு விடுகிறேன் ஆளுநர் மக்கள் குறை கேட்க வேண்டுமா.? இல்லையா.? என்று மக்களே முடிவு எடுக்கட்டும் என தெரிவித்தார். அதிகாரிகள் மக்களை அணுகக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் தினமும் ஒரு மணி நேரம் மக்களை சந்திக்க வேண்டும் என அதிகாரிகளிடம் நான் கூறியிருக்கிறேன் என்றார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் மக்கள் சந்திப்பிற்கு தடையாக இல்லை என்றும் கூறிய அவர், நாராயணசாமி இதை ஏன் தீவிரமாக எதிர்க்கிறார் என்றும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒருவருக்காவது தீர்வாக இருக்காதா என்றும் தெரிவித்த அவர், நான் மக்களை தான் சந்திக்கிறேன் தீவிரவாதிகளை அல்ல என்றும், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினார். ஆளுநர் என்றால் நாராயணசாமிக்கு அலர்ஜியாகி விடுகிறது அதுவும் துணைநிலை ஆளுநர் என்றாலே கூடுதல் அலர்ஜியாக மாறிவிடுகிறது என்றும் தமிழிசை தெரிவித்தார்.